உப்பள்ளியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் தகவல்

உப்பள்ளி-தார்வார் மாநகரில் ரூ.1,207 கோடி செலவில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் கோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-03 18:45 GMT

உப்பள்ளி-

உப்பள்ளி-தார்வார் மாநகரில் ரூ.1,207 கோடி செலவில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் கோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

குடிநீர் ஒப்பந்தம்

உப்பள்ளி- தார்வார் மாநகராட்சி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறது. மாநகராட்சி பகுதியில் குடிநீர் வழங்கும் பணியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 328 பேர் தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்தநிலையில் பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி குடிநீர் வினியோகம் செய்யும் 328 ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி நிர்வாகம் அவர்களை பணியிடை நீக்கம் செய்தது. இதையடுத்து மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் உப்பள்ளி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில், உப்பள்ளி- தார்வார் மாநகராட்சியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் 328 பேரையும் பணிநிரந்தரம் செய்யக்கோரி உத்தரவிட்டது.

5 மாத சம்பளம் வழங்கவில்லை

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அவர்கள் 328 பேரை பணிநிரந்தரம் செய்து பணியில் சேர்ந்தனர். இந்தநிலையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட 328 பேருக்கும் கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் சம்பளம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், நேற்று உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனர் கோபாலகிருஷ்ணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநகராட்சியில் குடிநீர் பணிநிரந்தர செய்யப்பட்ட ஊழியர்கள் 328 பேருக்கும் 5 மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 மாத சம்பள தொகை விரைவில் வழங்கப்படும். மாநகராட்சி முழுவதும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடிநீர் தட்டுப்பாடு

மேலும் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் உள்ள 82 வார்டுகளுக்கும் ரூ.1,207 கோடி செலவில் 24 மணி நேரமும் வீடுகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார தட்டுப்பாடு, மழை பெய்யாத காரணத்தால் மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்