ஞானவாபி மசூதி ஆய்வு விவகாரம்: இந்து, முஸ்லிம்கள் தங்களை பிளவுப்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும் - மராட்டிய உள்துறை மந்திரி
ஞானவாபி மசூதி ஆய்வு விவகாரத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் தங்களை பிளவுபடுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும் என உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் கூறியுள்ளார்.
பதற்றமான சூழ்நிலை
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதியில் இந்து கோவிலுக்கான அடையாளம் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் தொழுகைக்காக கை, கால்கள் கழுவும் குளத்தின் மத்திய பகுதியில் சிவலிங்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை, மனுதாரரின் வக்கீல் கோர்ட்டில் தெரிவித்தார்.
இதையடுத்து கோர்ட்டு அந்த குளத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. எனினும், குளத்தில் இருப்பது நீருற்றுக்கான கல் என்று முஸ்லிம்கள் கூறியுள்ளனர். இதனால் வாரணாசியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதுகுறித்து நேற்று மராட்டிய உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் பதிலளித்து அவர் கூறியதாவது:-
பிளவு வேண்டாம்
மசூதி தொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு முடிவெடுக்கும். மராட்டியத்தில் உள்ள இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த சகோதர, சகோதரிகள் மத அடிப்படையில் தாங்களை யாரும் பிளவுபடுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாநிலத்தை பொறுத்தவரை தற்போது அமைதியான சூழல் தான் நிலவுகிறது. மராட்டிய போலீசார் தங்கள் பணியை செய்து வருகிறார்கள். அவர்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் கட்டுப்பாடுகள்
சமுக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய மற்றும் சர்ச்சைக்குரிய பதிவுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “ சமூக வலைதளத்தில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்று நான் கூறமாட்டேன். ஆனால் சமூக ஊடக பயனர்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
கட்டுப்பாடுகளை விதிப்பது சமூக ஊடகங்களை தடை செய்வதற்கு சமமானதாக நான் கருதுகிறேன். மாறாக எதிர்காலத்தில் இதுகுறித்த சில நெறிமுறைகள் தயாரிக்கப்பட வேண்டும். இதை பற்றி நாங்கள் சிந்தித்து வருகிறோம்” என்றார்.