அசானி புயல் காரணமாக மேற்குவங்காளம், ஒடிசாவில் பலத்த மழை
அசானி புயல் காரணமாக மேற்குவங்காளம் மற்றும் ஒடிசாவில் பலத்த மழை பெய்தது.
புதுடெல்லி,
அசானி புயல் காரணமாக மேற்குவங்காளம் மற்றும் ஒடிசாவில் பலத்த மழை பெய்தது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘அசானி' என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் தீவிரமடைந்தது.
இந்த நிலையில் நேற்று தொடர்ந்து நகர்ந்த ‘ஆசானி’ புயல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக மேற்குவங்காளத்தில் தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் நேற்று காலை முதலே இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை வருகிற 13-ந்தேதி வரை நீடிக்கும் என்றும், மீனவர்கள் 15-ந்தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாநில வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
இதேபோல் ஒடிசா மற்றும் ஆந்திராவிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடற்கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுமேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வட ஆந்திரா, ஒடிசாவை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதன் அருகில் உள்ள வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். இந்த புயல் தொடர்ந்து 48 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வரும் 13-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் 7 செ.மீட்டரும், ஊட்டியில் 6 செ.மீட்டரும், பெருந்துறை, பொள்ளாச்சி பகுதியில் தலா 5 செ.மீட்டரும், குறைந்தபட்சமாக ஓசூர், போலூர், உடுமலைபேட்டை, ஒகேனக்கல், ஊத்துக்குளி, கோபிசெட்டிபாளையம், அவிநாசி, சங்கரிதுர்க், நடுவட்டம், பவானி, பவானிசாகர், தேவலா பகுதியில் தலா ஒரு செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.