மீண்டும் கைதான குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு 5 நாள் போலீஸ் காவல்
கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கவுகாத்தி,
குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக, எம்.எல்.ஏ. மீது அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 19-ந் தேதி அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரை போலீசார் அசாம் அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அசாம் கோர்ட்டில் ஜாமீன்கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவருக்கு நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், அவர் அதிகாரிகளை கடமையை செய்ய தடுத்ததாக பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தற்போது, ஜிக்னேஷ் மேவானி 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜிக்னேஷ் மேவானியின் ஜாமீன் மனுவை பர்பேட்டாவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.