80 ஆண்டுகளாக ரசிகர்களை வசீகரித்த குரல்; லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது பெற்ற பிரதமர் மோடி பேச்சு
மராட்டியத்தின் மும்பை நகரில் பிரதமர் மோடிக்கு லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது இன்று வழங்கப்பட்டு உள்ளது.
மும்பை,
இந்தியாவின் இசைக்குயில் என்று புகழப்பெற்ற பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி 6ந்தேதி தனது 92 வயதில் காலமானார். அவரது நினைவாக மற்றும் அவரை கவுரவிக்கும் வகையில், முதன்முறையாக மும்பை நகரில் லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில் பிரதமர் மோடி, லதா தீனநாத் மங்கேஷ்கர் விருதினை முதல் நபராக பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே, உஷா மங்கேஷ்கர், மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, மராட்டிய எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருது பெற்ற பின்பு பிரதமர் மோடி பேசும்போது, உலகிற்கான இந்தியாவின் கலாசார தூதராக லதா மங்கேஷ்கர் விளங்கினார். லதா மங்கேஷ்கர் எனது மூத்த சகோதரி. அவரது பெயரில் வழங்கப்பட்ட இந்த விருது நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.
லதா சகோதரியிடம் இருந்து எப்போதும் அளவற்ற அன்பை நான் பெற்றுள்ளேன். பல தசாப்தங்களுக்கு பின்னர், சகோதரி இல்லாமல் ராக்கி அணிவது இதுவே முதன்முறை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
80 ஆண்டுகளுக்கும் கூடுதலாக லதா மங்கேஷ்கரின் குரல் ரசிகர்களை வசீகரித்து இருந்தது. 30க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார். அது இந்தியாக இருக்கட்டும். மராத்தி, சமஸ்கிருதம் அல்லது பிற இந்திய மொழிகள் எதுவாக இருப்பினும் ஒவ்வொரு மொழியிலும் அவரது குரல் ஒன்றேதான் என்று கூறியுள்ளார்.