மாநிலங்களவை உறுப்பினராக ஹர்பஜன் சிங் போட்டியின்றி தேர்வு..!!

மாநிலங்களவை உறுப்பினராக ஹர்பஜன் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2022-03-24 21:58 GMT
கோப்புப்படம்
சண்டிகார், 

பஞ்சாப்பில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற 9-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்த பதவிகளுக்கு வருகிற 31-ந்தேதி தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

பஞ்சாப்பில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருந்த நிலையில், அந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறும் சூழல் நிலவியது. அதன்படி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்பட 5 பேரை வேட்பாளர்களாக ஆம் ஆத்மியும் அறிவித்தது. இவர்களும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அவர்களை எதிர்த்து வேறு எந்த கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இந்த தேர்தலில் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நேற்று ஆகும்.

இதில் யாரும் வேட்புமனுவை வாபஸ் பெறாமலும், மாற்று கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்யாமலும் இருந்ததால், ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட 5 பேரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதன் மூலம் ஹர்பஜன் சிங், ராகவ் சத்தா, அசோக் மிட்டல், சந்தீப் பதக், சஞ்சீவ் அரோரா ஆகிய 5 பேரும் ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்