காவல்துறை பணியிட மாற்ற ஊழல் தொடர்பாக விசாரணை; தேவேந்திர பட்னாவிஸ் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு
காவல்துறை பணியிட மாற்றத்தில் நடந்த ஊழல் மற்றும் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் தேவேந்திர பட்னாவிசிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மும்பை,
பாஜக மூத்த தலைவரும், மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான தேவாந்திர பட்னாவிஸ், போலீஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றத்தில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக மாநில உளவுப்பிரிவு தலைவராக இருந்த ராஷ்மி சுக்லா, அப்போதைய டி.ஜி.பி.க்கு அனுப்பிய தொலைபேசி ஒட்டுக்கேட்பு ஆதாரத்தையும் பட்னாவிஸ் வெளியிட்டார்.
இதனால் அரசின் ரகசியங்களை கசியவிட்டதற்காக ராஷ்மி சுக்லா மீது மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இன்று அவரிடம் விசாரணை நடத்தப்படுவதையொட்டி, மலபார் ஹில் பகுதியில் உள்ள பட்னாவிஸ் வீட்டிற்கும், மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.