பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது - ஜே.பி.நட்டா

பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

Update: 2022-03-10 14:52 GMT
புதுடெல்லி,

தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றதையடுத்து இன்று டில்லியில் உள்ள பா.ஜ. தலைமை அலுவலகத்திற்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்தனர். இதையடுத்து ஏராளமான தொண்டர்களும் அங்கு குவியத்துவங்கினர்.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றும். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

4 மாநிலங்களில் வெற்றி உறுதியானதையடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்தனர். இதையடுத்து ஏராளமான தொண்டர்களும் அங்கு குவிந்தனர். மேலும் அங்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது கட்சி தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கட்சி தொண்டர்களிடம் பேசியதாவது:-

பாஜக மாடலை மக்கள் நம்புகின்றனர். பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் தொடர்ந்து பாஜகவுக்கு வாக்களித்து வருகின்றனர். 2014 முதல் மக்கள் பாஜகவுக்கு ஆசி வழங்கி வருகின்றனர். உ.பி.யில் மீண்டும் முதல்வர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை. கோவாவில் ஹாட்ரிக் சாதனை படைக்கிறோம்.

பிரதமர் மோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்தார். பிரதமர் மோடி நாட்டின் அரசியலை வளர்ச்சி அரசியலாக மாற்றினார். மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றிக்காக எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். இந்த முயற்சியை நாங்கள் 2024 பொதுத் தேர்தலிலும் தொடர்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்