உக்ரைன் போர்: மேலும் 210 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்

இந்திய விமானப்படையின் சி-17 ரக போர் விமானம் மூலம் மேலும் 210 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.

Update: 2022-03-03 20:37 GMT
புதுடெல்லி,

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டில் இருந்து இந்திய விமானப்படையின் சி-17 ரக போர் விமானம் மூலம் மேலும் 210 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர். டெல்லி வந்தடைந்த இந்தியர்களை பாதுகாப்பு துறை இணை அதிகாரி அஜய் பட் வரவேற்றார். 

கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முதல் அறிவுறுத்தலை தொடர்ந்து இதுவரை, உக்ரைனை விட்டு 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேறி உள்ளனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் மூலம் 3,000 மாணவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் 18 விமானங்களில் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும், இந்திய விமான படையின் 3 சி-17 விமானங்கள் மற்றும் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோ பர்ஸ்ட் மற்றும் கோ ஏர் உள்ளிட்ட பிற வர்த்தக விமானங்கள் வழியே அவர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்