வெளிநாடு செல்லும் மாணவர்கள் குறித்து மத்திய மந்திரி கருத்து - டி.கே.சிவக்குமார் கண்டனம்

வெளிநாடு செல்லும் மாணவர்கள் குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறிய கருத்துக்கு டி.கே.சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-02 20:14 GMT
பெங்களூரு,

குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் படிக்க வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களில் 90% பேர் இந்தியாவில் நுழைவுத் தேர்வில் கூட தேர்ச்சி பெறுவதில்லை என்றும் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியிருந்தார். 

இது குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;-

“உக்ரைனில் கர்நாடக மாணவர் நவீன், ரஷியாவின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளார். மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, இந்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் உக்ரைனில் சென்று படிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை கண்டிக்கிறேன். 

தங்களின் குழந்தைகளை மருத்துவம் படிக்க வைக்க வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். இங்கு கட்டணம் ரூ.2 கோடி வரை வசூலிக்கிறார்கள். பொருளாதார பலம் இல்லாதவர்கள் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். 

அமெரிக்கா, லண்டனில் படிக்க வசதி இல்லாத பலர் நமது நாட்டிற்கு அதுவும் கர்நாடகத்திற்கு வந்து படிக்கிறார்கள். நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்கு போய் படித்தால் அது தவறு ஆகாது. உலகிலேயே சிறந்த மனிதவளத்தை கொண்ட நாடு இந்தியா. கர்நாடகத்தில் அரசு-தனியார் என்று மொத்தம் 63 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் கர்நாடகத்தினர் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் படிக்கிறார்கள். 

உக்ரைனில் பலியான மாணவர் நவீன் இங்கு எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி.யில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனாலும் அவருக்கு இங்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. குறைந்த மதிப்பெண்கள் எடுத்தவர்கள் வெளிநாடுகளுக்கு படிக்க செல்கிறார்கள் என்று கூறிய மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.”

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்