மாணவர்கள் படிப்புக்காக வெளிநாடு செல்வது ஏன் என்பது குறித்து ஆய்வு - மராட்டிய மந்திரி தகவல்
மாணவர்கள் படிப்புக்காக வெளிநாடு செல்வது ஏன்? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என மராட்டிய மந்திரி அமித் தேஷ்முக் கூறியுள்ளார்.
மும்பை,
போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கி உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் படிக்க சென்றவர்கள் ஆவர். இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாலும், போதிய மருத்துவ சீட் இல்லாததாலும், அவர்கள் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க முடிவதால் உக்ரைன் நாட்டுக்கு சென்றது தெரியவந்து உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மராட்டிய மாநில உயர் கல்வி மற்றும் தொழில்கல்வி துறை மந்திரி அமித் தேஷ்முக் கூறியதாவது:-
“ரஷியா மற்றும் உக்ரைனில் மருத்துவ படிப்பு கட்டணம் குறித்து மாநில அரசு கவனத்தில் எடுத்து கொண்டு உள்ளது. மேலும் மாணவர்கள் ஏன் படிப்புக்காக வெளிநாடு செல்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்வோம். மேலும் வெளிநாடுகளில் உள்ள வசதிகளை மாணவர்களுக்கு மாநிலத்திலேயே செய்து கொடுக்க முடியுமா என்பதை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளோம். மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.