பஜ்ரங்தள உறுப்பினர் கொலை வழக்கு: சிவமொக்காவில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு!

சிவமொக்கா நகரில் ஒரு வாரத்திற்குப் பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

Update: 2022-02-28 08:50 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிவமொக்கா டவுன் சீகேஹட்டி பகுதியில் வசித்து வந்த ஹர்ஷா (வயது 24) படுகொலை செய்யப்பட்டார். பஜ்ரங்தள பிரமுகரான இவரை கடந்த 20-ந்தேதி இரவு மர்மநபர்கள் நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக காசிப் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

அவரது மரணம் அடுத்த 48 மணிநேரத்தில் கும்பல் வன்முறையைத் தூண்டியது, கல் வீசுதல், வாகனங்களுக்கு தீ வைத்தல் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களை சேதப்படுத்துதல் ஆகிய சம்பவங்கள் நடந்தன். இதையடுத்து 144 தடை உத்தரவும், ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.

மேலும் சிவமொக்காவில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் அங்கு அதிரடிப்படை, அதிவிரைவுப்படை, ஆயுதப்படை உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், கர்நாடகாவின் சிவமோக்கா மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டன, ஆனால் மார்ச் 4 வரை பெரிய கூட்டங்களுக்கு தடை உத்தரவு அமலில் உள்ளது.

இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, “நிலைமை கட்டுக்குள் உள்ளது. மக்கள் கவலைப்படத் தேவையில்லை, அரசு உங்களுடன் உள்ளது, உங்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும். கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு, மற்றவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்