குடும்பம் நடத்த வரமறுத்த மனைவி; மனித வெடிகுண்டாக மாறி கொலை செய்த கணவர்
குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை மனித வெடிகுண்டாக மாறி கொலை செய்து தானும் உயிரிழந்தார் கணவர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் ஆராவல்லி மாவட்டம் மெகராஜ் நகரில் வசித்து வருபவர் லாலாபாகி (வயது 45) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சாராபென் (43). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து கடந்த 45 நாட்களுக்கு முன்பு சாராபென் கணருடன் கோபித்துக் கொண்டு பி.டி.சப்ரா பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனாலும் லாலாபாகிக்கு மனசு கேட்கவில்லை. மாமனார் வீட்டுக்கு சென்று தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மனைவியை அழைத்தார்.
ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். மேலும் மனைவி குடும்பத்தினர் லாலாபாகியை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த லாலாபாகி மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக அவர் மனித வெடிகுண்டாக மாற முடிவு செய்தார்.
சம்பவத்தன்று லாலாபாகி தனது இடுப்பு பகுதியில் 2 ஜெல்லட்டின் குச்சிகளை சுற்றி வைத்து கட்டி அதற்கு பேட்டரி மூலம் வயரால் இணைப்பு கொடுத்தார். இது தெரியாமல் இருக்க சட்டை அணிந்து கொண்டார்.
பின்னர் மனைவி வீட்டுக்கு நேராக சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போதும் சாராபென் நான் உன்னுடன் வாழ விரும்பவில்லை என கூறினார்.
எனவே கோபம் தலை உச்சிக்கு ஏற லாலாபாகி தனது மனைவியை கட்டிப் பிடித்தார். உடனே தனது இடுப்பில் கட்டி இருந்த ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க செய்தார். இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது 2 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.