டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்

டெல்லியில் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன.

Update: 2022-02-25 09:34 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் ஒமைக்ரான் பரவலால் கொரோனா 3-வது அலை ஏற்பட்டது. இதனால், தொற்று பாதிப்பு மளமளவென அதிகரித்தது. இதன் காரணமாக  தலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இரவு ஊரடங்கு, கடைகள் திறக்க கட்டுப்பாடு போன்றவற்றை டெல்லி அரசு அமல்படுத்தியது. 

தற்போது கொரோனா 3-வது அலை பரவல் வேகம் நாடு முழுவதும் வேகமாக சரிந்துள்ளது. இதனால், நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. அந்த வகையில், டெல்லியிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. 

வரும் திங்கள் கிழமை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் வரும் 1 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. மாஸ்க் அணியாவிடில் விதிக்கப்படும் அபராதத்தொகையும் ரூ.1000-ல் இருந்து ரூ. 500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
இரவு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைகள், உணவு விடுதிகள் திறந்திருக்க விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.  

எனினும், மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுகிறார்களா? என அரசு தீவிரமாக கண்காணிக்கும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவிகிதத்திற்கு கீழ் இருக்கும் வரை கட்டுப்பாடுகள் தளர்வு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்