நவாப் மாலிக் கைது: தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சரத் பவார் ஆலோசனை
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சரத் பவார் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
மும்பை,
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மராட்டிய மந்திரி நவாப் மாலிக் , சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதற்கிடையில், நவாப் மாலிக் வீட்டிற்கு இன்று காலை 6 மணி சென்ற அமலாக்கத்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அவரை அலுவலகம் அழைத்து சென்று அதிகாரிகள் காலை 8:30 மணி முதல் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பல மணி நேர விசாரணைக்கு பின்னர் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனையறிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், மத்திய அரசுக்கும், அமலாக்கத்துறையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்களான ராஜேஷ் தொபி, ஜகன் பிஜூஜ்பால், அஜித் பவாருடன் தனது இல்லத்தில் வைத்து சரத் பவார் ஆலோசனை நடத்தி வருகிறார்.