மந்திரி ஈசுவரப்பாவை நீக்கும் வரை கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரை நடத்த விடமாட்டோம்: டி.கே.சிவக்குமார்

ஈசுவரப்பாவிடம் இருந்து மந்திரி பதவியை பறிக்கும் வரை சட்டசபை கூட்டத்தொடரை நடத்த விடமாட்டோம் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-19 20:04 GMT
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சட்டசபையை நடத்த விடமாட்டோம்

தேசிய கொடியை அவமதித்த ஈசுவரப்பாவிடம் இருந்து மந்திரி பதவியை பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதற்காக விதானசவுதாவில் இரவு, பகலாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எங்களது போராட்டம் 2 நாட்கள் நிறைவு பெற்று, 3-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. ஈசுவரப்பாவிடம் மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி கூறவில்லை.

அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தான் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. அவரிடம் இருந்து மந்திரி பதவியை பறிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். சட்டசபை கூட்டத்தொடரையும் நடத்த விடமாட்டோம். தேசிய கொடியை அவமதித்து விட்டு பெரிய சாதனை படைத்திருப்பது போல் ஈசுவரப்பா பேசி வருகிறார்.

பா.ஜனதா தொண்டர்களாகவே...

சட்டசபையில் போராட்டத்தின் போது தேசிய கொடியை அவமதித்து விட்டதாக பா.ஜனதாவினர் கூறுகின்றனர். அவ்வாறு அவமதித்திருந்தால் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யட்டும். எதற்காக வழக்குப்பதிவு செய்யவில்லை?. முதலில் தேசிய கொடியை அவமதித்த ஈசுவரப்பா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஈசுவரப்பாவை மந்திரி பதவியில் இருந்து நீக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தீவிரப் போராட்டத்தில் ஈடுபடும்.

ஹிஜாப் விவகாரத்தில் சிவமொக்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருப்பது சரியில்லை. இதுதொடர்பாக சிவமொக்கா போலீஸ் சூப்பிரண்டுடன் பேசுவேன்.

பூமி பூஜை நடத்த வேண்டும்

இந்த மாதம் 27-ந்தேதியில் இருந்து மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மீண்டும் பாதயாத்திரை தொடங்கப்பட உள்ளது. இந்த பாதயாத்திரை பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, குடிநீருக்காக நடத்தப்படுவது ஆகும். மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜனதா ஆட்சி தான் நடக்கிறது. நாங்கள் இரட்டை என்ஜின் கொண்ட அரசு என்று கூறிவருகின்றனர்.

மேகதாதுவில் அணைக்கட்டுவது உறுதி என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறி வருகிறார். வெறும் வாய் வார்த்தையால் கூறுவதை நிறுத்திவிட்டு, அதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அணைக்கட்டுவதற்காக உடனடியாக நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு தொடங்க வேண்டும். அணைகட்டுவதற்கான பூமி பூஜையை நடத்த வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்