கோவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பொதுமக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தியும் தொடர்ந்து தி.மு.க.வினர் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும் என்ற தகவலை தெரிந்துகொண்ட தி.மு.க.வினர் அமைதி பூங்காவாக திகழ்ந்து வரும் கோவை மாநகரத்தை தற்போது கலவர பூமியாக மாற்றி உள்ளனர். கரூர் மற்றும் சென்னை மாவட்டங்களை சேர்ந்த ரவுடிகள் மற்றும் குண்டர்கள் கோவை மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலமாக பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கியும், பொதுமக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தியும் தொடர்ந்து தி.மு.க.வினர் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து மாவட்ட கலெக்டரிடமும், போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தனர். ஆனாலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், கட்சி நிர்வாகிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.
தி.மு.க.வினரின் அராஜக செயல்கள் அனைத்துக்கும் எங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, தி.மு.க.வினருக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.