சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழா..!!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழா 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. 13-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது.
இந்த நிலையில், பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடை பெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்தமாதம் 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். மறு நாள் 9-ந் தேதி ஆராட்டு திருவிழா தொடங்குகிறது.
அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றிவைக்கிறார். இதையொட்டி 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தினமும் ஸ்ரீபூதபலி, உத்சவபலி ஆகியவை நடைபெறும். 17-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். 18-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும்.