உ.பி.யில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு..!
உத்தரபிரதேச மாநிலத்தில் 58 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. நாளை அங்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.
லக்னோ,
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆளுகிறது. அங்கு 403 இடங்களை கொண்டுள்ள சட்டசபையில் ஏழு கட்ட தேர்தல் நாளை (10-ந்தேதி) தொடங்கி அடுத்த மாதம் 7-ந் தேதி முடிகிறது.
அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே ‘நீயா, நானா? ‘என்கிற அளவுக்கு பலத்த போட்டி நிலவுகிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளும் பலப்பரீட்சையில் இறங்கி உள்ளன.
அங்கு முதல் கட்ட தேர்தல், மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.
பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி காணொலிக்காட்சி வழியாக பிரசாரம் செய்தார். உள்துறை மந்திரி அமித்ஷா மதுராவில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். சமாஜ்வாடி கட்சிக்காக அதன் தலைவர் அகிலேஷ்யாதவும், பகுஜன் சமாஜூகாக அந்தக்கட்சியின் தலைவர் மாயாவதியும், காங்கிரசுக்காக அந்தக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காவும் களமிறங்கி பிரசாரம் செய்தனர்.
கொரோனாவுக்கு மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட பிரசாரத்தில் அனல் பறந்தது. முதல் கட்ட தேர்தலில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. இந்த தேர்தலில் 623 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை 2.27 கோடி வாக்காளர்கள் நாளை தீர்மானிக்கிறார்கள்.