ஒடிசாவில் பயங்கரம்; மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடியில் சிக்கி பத்திரிகையாளர் பலி!
தரையில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
புவனேஷ்வர்,
ஒடிசாவில் பஞ்சாயத்து தேர்தல் 5 கட்டங்களாக பிப்ரவரி 16ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் கலாஹண்டி மாவட்டம் மதன்பூர் ராம்பூர் தொகுதியில் உள்ள கர்லகுண்டா பாலம் அருகே தேர்தலைப் புறக்கணிக்கக் கோரியும் பிற கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவோயிஸ்டுகளால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு பார்வையிட சென்று செய்தி சேகரிக்க பத்திரிகையாளர் ஒருவர் சென்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அங்கு தரையில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தலின் போது மாவோயிஸ்ட் வன்முறை மீண்டும் தலைதூக்குவதை இந்த சம்பவம் உணர்த்துவதாக உள்ளது. எனவே, வெடிகுண்டு தடுப்புப் படையினருடன் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அப்பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர்.