டெல்லி: இரவு ஊரடங்கால் பேரிழப்பு; உணவு விடுதி உரிமையாளர்கள் வேதனை
டெல்லியில் இரவு ஊரடங்கால் பெரிய அளவில் எங்களுக்கு இழப்பு ஏற்படும் என உணவு விடுதி உரிமையாளர்கள் கூறினர்.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், சமீப நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்லியில் புதிதாக 290 பேருக்கு நேற்று (திங்கட்கிழமை) பாதிப்பு உறுதியாகி இருந்தது. கடந்த ஜூன் 10ந்தேதியில் இருந்து ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை அதிகம் ஆகும்.
கடந்த 2 நாட்களில் தினமும் 200 பேருக்கும் கூடுதலாக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு டெல்லி அரசு இரவுநேர ஊரடங்கை விதிக்கும் முடிவை அறிவித்தது. இந்த உத்தரவு நேற்றிரவு (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வந்தது.
இதன்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும். இரவில் செல்லும் வாகனங்களை பணியில் உள்ள போலீசார் நிறுத்தி, சோதனை செய்து பின்னரே அவற்றை செல்ல அனுமதிக்கின்றனர். இந்த ஊரடங்கால் பல சாலைகள் வெறிச்சோடிய நிலையில் இருந்தன.
இதுபற்றி டெல்லியில் உணவு விடுதி உரிமையாளர்கள் கூறும்போது, இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணிவரையே எங்களுக்கு விறுவிறு வர்த்தகம் இருக்கும். புது வருடமும் வருகிறது. இரவு ஊரடங்கால் பெரிய அளவில் எங்களுக்கு இழப்பு ஏற்படும் என கூறினர்.