மத்திய மந்திரியிடம் பணம் கேட்டு மிரட்டல் - 5 பேர் கைது

மத்திய மந்திரி தொடர்புடைய ரகசிய வீடியோ தங்களிடம் இருப்பதாக கூறி குற்றவாளிகள் பணம் பறிக்க முயற்சித்துள்ளனர்.

Update: 2021-12-25 02:57 GMT
புதுடெல்லி,

உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகனுக்கு தொடர்பு உள்ளதாக தேசிய அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில், லகிம்பூர் கேரியில்  4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது முன்பே திட்டமிடப்பட்ட சதி. அது கவனக்குறைவால் நடந்தது அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர் சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இது ஒருபுறம் இருக்க, மந்திரி அஜய் மிஷ்ராவுக்கு போன் மூலம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

மந்திரி அஜய் மிஷ்ராவிடம் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் அவரிடம் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து, அவருடைய உதவியாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பின், புகார் பெறப்பட்ட நிலையில் டெல்லி போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், நொய்டாவை சேர்ந்த 4 பேர் மற்றும் டெல்லியின் சீரஸ்பூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான கபீர் வர்மா, அமித் குமார், அமித் மஜ்ஹி, நிஷாந்த் மற்றும் அஷ்வானி ஆகியோர் 21-26 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது  விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குற்றவாளிகள் மத்திய மந்திரி தொடர்புடைய ரகசிய வீடியோ  தங்களிடம் இருப்பதாக கூறி பணம் பறிக்க முயற்சித்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்