கோவா கடல் பகுதியில் ‘மர்முகோவா’ போர்க்கப்பல் வெள்ளோட்டம் - உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டது
முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘மர்முகோவா’ போர்க்கப்பல் கோவா கடல் பகுதியில் முதல் முறையாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
கோவா,
1961 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 19) போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவாவை இந்திய ஆயுதப் படைகள் விடுவித்தனர். இதற்காக ‘ஆபரேஷன் விஜய்’ என்ற திட்டத்தை இந்திய ஆயுதப்படை மேற்கொண்டது. ஒவ்வொரு வருடமும் அவர்களின் தியாகத்தை இந்த நாளில் நாம் நினைவுக்கூறும் விதமாக "கோவா விடுதலை தினம் " கொண்டப்படுகிறது.
அந்த வகையில் கோவா மாநிலத்தின் விடுதலை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மேலும் பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் கோவா சுதந்திர தினத்தையொட்டி, பி15பி ரகத்தை சேர்ந்த 2-வது போர்க்கப்பலான ‘மர்முகோவா’ நேற்று முதல் முறையாக கோவா கடல் பகுதியில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ‘மர்முகோவா’ போர்க்கப்பலானது, மும்பை மசாகோனில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கப்பல், அடுத்த ஆண்டு மத்தியில் இந்திய கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.