குன்னூருக்கு விரைகிறார் விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி

ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூருக்கு விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி விரைகிறார்.

Update: 2021-12-08 10:32 GMT
புதுடெல்லி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே , முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி  உட்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் திடீர் விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வெலிங்டன் ராணுவக்கலூரியில் நடைபெற இருந்த கருத்தரங்கில் பங்கேற்க சென்றபோது ஹெலிகாப்டர் விபத்து நேரிட்டது. 

ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றியதும் உள்ளூர் மக்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.விபத்து நடந்த பகுதியில் தேடுதலில் ஈடுபடுவதற்காக 15 பேர் கொண்ட ராணுவ குழுவினர் வந்திருக்கின்றனர்.

விபத்துக்குள்ளான விமானப்படை ஹெலிகாப்டரில் பயணித்த முப்படைகளின் தலைமை தளபதி பிபிவின் ராவத் நிலை இதுவரை தெரியவில்லை.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில்  அவரது மனைவி நிலை என்ன ஆயிற்று என்பது இதுவரை தெரியவில்லை.  குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 

ஹெலிகாப்டர் விபத்து குறித்து விமானப்படை தளபதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய  பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில்,  ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூருக்கு விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி விரைந்து விபத்து பகுதியை பார்வையிட்டு விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. 

ஹெலிகாப்டர், ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட எம்ஐ-17 வி 5 ரகத்தை சேர்ந்தது ஆகும்.  ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் உள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை அருகே பறந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து எரிந்தது. 

மீட்கும் பணி தொடர்ந்து நீடிக்கிறது.விபத்துக்குள்ளான எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர் குறைந்த தொலைவில் வீரர்களையும் ஆயுதங்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகிறது. இதில் 36 பேர் வரை பயணிக்கலாம்.

ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் 4 டன் எடை வரையிலான சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாகும். இந்த எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர் மணிக்கு 260 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காகவும் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்