கால வரையறை கணிக்க முடியாது; இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தாக்கும்; மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தாக்கும் என மத்திய அரசு உறுதிபட தெரிவித்து உள்ளது.

Update: 2021-05-06 00:32 GMT
கொரோனாவின் 2-வது அலை
இந்தியாவில் கடந்த ஆண்டு தொற்றிய கொரோனாவின் முதல் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும் கடந்த ஆண்டு இறுதியிலேயே அதன் வீரியம் குறையத்தொடங்கியதுடன், இந்த ஆண்டு தொடக்கத்தில் வேகமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருந்தது.ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த 2 மாதங்களாக நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை பரவி வருகிறது. இது முதல் அலையை விட மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சுகாதாரத்துறை திண்டாடி வருகிறது.

தயாராக இருக்க வேண்டும்
இந்த நிலையில் கொரோனாவின் 3-வது அலையும் இந்தியாவை பதம்பார்க்கும் என மத்திய அரசு எச்சரித்து உள்ளது. இது குறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவில வைரஸ் பரவல் உச்சகட்டத்தில் இருப்பதால் 3-ம் கட்டமும் தவிர்க்க முடியாது. ஆனால் 3-வது அலை எப்போது ஏற்படும் என்பதற்கான கால வரையறை குறித்து கணிக்க முடியாது. எனவே புதிய அலைகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்’ என தெரிவித்தார்.நாடு தற்போது எதிர்கொள்ளும் இத்தகைய மூர்க்கத்தனமான நீண்ட அலை முன்னதாக கணிக்கப்படவில்லை எனவும் விஜய்ராகவன் தெரிவித்தார்.

டாக்டர்களுக்கு வேண்டுகோள்
இந்த நிகழ்ச்சியில் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறும்போது, தொற்று பாதித்து வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு ஆன்லைன் மூலமான ஆலோசனைகளை வழங்க டாக்டர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.பெருகி வரும் வைரஸ் மாறுபாடுகளுக்கு தடுப்பு நடவடிக்கைகள் ஒன்றேதான் எனக்கூறிய அவர், முக கவசம், சமூக இடைவெளி, சுகாதாரம், தேவையற்ற சந்திப்புகளை தவிர்த்தல், வீட்டிலேயே இருத்தல் போன்ற கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.இதைப்போல, வெளிநாடுகளில் இருந்து வரும் மருத்துவ உதவிகளை மூத்த அதிகாரிகள் குழு ஒன்று கண்காணித்து, அவை உடனடியாக தேவைப்படும் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைப்பதாக சுகாதார அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்தார்.

1 லட்சத்துக்கு மேற்பட்ட நோயாளிகள்
இதற்கிடையே தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தலா 1 லட்சத்துக்கு அதிகமானோர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்த வகையில் மராட்டியம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.இதைப்போல 9 மாநிலங்களில் கடந்த 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், அதன்படி இந்த பிரிவை சேர்ந்த 6.71 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்