கர்நாடகத்தில் வெடிவிபத்தில் வாலிபர் உடல் சிதறி பலி

கர்நாடகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக கல்குவாரிக்கு பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் வெடித்து வாலிபர் உடல் சிதறி பலியானார். மேலும் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Update: 2021-04-04 20:23 GMT
ஹாசன்: கர்நாடகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக கல்குவாரிக்கு பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் வெடித்து வாலிபர் உடல் சிதறி பலியானார். மேலும் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

வெடி விபத்து சம்பவங்கள்

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி கல்குவாரிக்கு லாரியில் ஏற்றி சென்ற ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் பலியானார்கள். அந்த சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி சிக்பள்ளாப்பூரில் கல்குவாரியில் வெடி பொருட்கள் வெடித்ததில் 6 பேர் உடல் சிதறி பலியானார்கள். அடுத்ததடுத்த மாதங்களில் நடந்த இந்த சம்பவங்கள் கர்நாடகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதனால் கல்குவாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதேபோல மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலம் ஹாசனில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
 
வாலிபர் உடல் சிதறி பலி

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா ஜாகேனஹள்ளி அருகே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்குவாரிகளில் பாறைகளை வெடிவைத்து தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் லாரியில் வந்தன. அந்த ஜெலட்டின் குச்சிகளை அங்குள்ள ஒரு குடோனில் இறக்கி வைக்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில் பெட்டதஹள்ளி கிராமத்தை சேர்ந்த சம்பத் (வயது 27), நடராஜன், ரவிக்குமார் ஆகிய 3 பேரும் ஈடுபட்டு இருந்தனர். 

சம்பத் குடோனில் நின்றுகொண்டு ஜெலட்டின் குச்சிகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தார். மற்ற 2 பேர் ஜெலட்டின் குச்சிகளை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தனர். அந்த சமயத்தில் திடீரென்று ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. 

இதில் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டனர். குடோனில் நின்று கொண்டிருந்த சம்பத், சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். இந்த வெடி விபத்தில் சம்பத் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியானார். மற்ற 2 பேரும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். 

2 பேர் கவலைக்கிடம்

இந்த வெடி விபத்து சம்பவம் பற்றி அறிந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஒலேநரசிப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல் நிலை மோசமாக இருந்ததால், 2 பேரும் மேல் சிகிச்சைக்காக ஹாசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்கள் 2 பேரின் உடல் நிலையும் கவலைக்கிடமாக தான் உள்ளது. 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒலேநரசிப்புரா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வெடி விபத்து காரணமாக குடோனில் தீப்பிடித்து எரிந்தது. மேலும் அந்தப்பகுதியை சுற்றி வெடி மருந்து நெடியாக இருந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து குடோனில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர். 

உயர் போலீஸ் அதிகாரிகள்...

மேலும் அந்தப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த வெடி வெடித்த சத்தம் கேட்டு சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு குவிந்தனர். போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கேட்டு கொண்டனர். இதையடுத்து போலீசார் வெடி விபத்தில் பலியான சம்பத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒலேநரசிப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அந்தப்பகுதியில் வெடிக்காமல் கிடந்த ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்துகொண்டனர். 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெடி விபத்து நடந்த கல்குவாரி ஜாகேனஹள்ளியை சேர்ந்த நாகேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். கர்நாடகத்தில் இந்த ஆண்டில் 3-வது முறையாக வெடி விபத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்