தேசிய வாழை ஆராய்ச்சி மைய முயற்சியினால் லண்டனுக்கு 10 டன் நேந்திரன் வாழைத்தார்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது
தேசிய வாழை ஆராய்ச்சி மைய முயற்சியினால் லண்டனுக்கு 10 டன் நேந்திரன் வாழைத்தார்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது
திருச்சி,
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய முயற்சியினால் கேரளாவில் இருந்து 10 டன் நேந்திரன் வாழைத்தார்கள் கப்பல் மூலம் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நேந்திரன் வாழைத்தார்கள்
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மற்றும் கேரள அரசின் காய்கறிகள் மற்றும் பழங்கள் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியில் வாழை விவசாயிகள் ஒரு மாதகால கடல்வழி பயணத்திலும் கெட்டுப் போகாமலும் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கும் வண்ணம் உலகத் தரத்திலான தொழில் நுட்பங்களை கொண்டு நேந்திரன் வாழை சாகுபடி செய்தனர்.
இந்த வாழைகளில் இருந்து அறுவடை செய்யப்பட்ட சுமார் 10 டன் எடையுள்ள நேந்திரன் வாழைத்தார்கள் நவீன தொழில் நுட்பத்துடன் பதப்படுத்தப்பட்டு கொச்சி துறைமுகத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் கேரள மாநில அதிகாரிகள் மற்றும் வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தோட்டக்கலை துணை பொது இயக்குனர் ஏ. கே. சிங் காணொளி மூலம் பங்கேற்றார்.
தமிழர்கள் சுவைக்க வாய்ப்பு
இந்த வாழைத் தார்கள் இங்கிலாந்துக்கு போய் சேர்ந்ததும் அவை இங்கிலாந்து ஸ்காட்லாந்து நாடுகளில் வசிக்கும் தமிழ் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் புத்தாண்டில் இந்த நேந்திரன் வாழை பழத்தை சுவைக்கக் வாய்ப்பு கிடைக்கும் என்று வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் உமா தெரிவித்தார்.
மேலும் கோஸ்டரீகா, ஈகுவடார், கொலம்பியா போன்ற நாடுகளில் நிலவும் காலநிலை மாற்றம், வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் புதிய வகை வாடல் நோய் தொற்று காரணமாக வாழை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு தனக்கு சாதகமாக்கி உலக ஏற்றுமதி சந்தையில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு அதனை தக்க வைத்துக் கொள்ளவும் உறுதியாக இருக்கும் என்றார்.