42 பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்தியாவில் தடை - உள்துறை அமைச்சகம் தகவல்

பல்வேறு நாசவேலைகளில் தொடர்புடைய 42 பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-03-09 20:09 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்கள், நாச வேலைகளில் ஈடுபட்டதாக லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 42 பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி ஜி.கிஷன் ரெட்டி நேற்று தெரிவித்தார். இந்த அமைப்புகள், சட்ட விரோத செயல்கள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ், தடை செய்யப்பட்டுள்ளன.

மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், காஷ்மீரில் 2018-2020 கால கட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 635 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், பயங்கரவாத செயல்களில் சிக்கி 115 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டார்.

மேலும், இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2 ஆண்டுகளில் 61 ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன; இந்திய வங்காளதேச எல்லையில் 1,045 ஊடுருவல்கள் நடந்திருக்கின்றன, இந்திய நேபாள எல்லையில் 63 ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன. சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல், உளவுத்துறையை ஒழுங்குபடுத்துதல், பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கும் வழக்குத் தொடுப்பதற்கும் தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். 

மேலும் செய்திகள்