அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்துக்கு நன்கொடை வழங்காததால் பணிநீக்கம்: உத்தரபிரதேச ஆசிரியர் குற்றச்சாட்டு
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்துக்கு நன்கொடை வழங்காததால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக உத்தரபிரதேச ஆசிரியர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாலியா,
உத்தரபிரதேச மாநிலம் ஜெகதீஷ்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர், யஷ்வந்த் பிரதாப்சிங்.
இவர், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்துக்கு ரூ.ஆயிரம் நன்கொடை வழங்குமாறு தன்னை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால் தன்னை பள்ளி நிர்வாகிகள் பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட்டு அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும், தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் கோர்ட்டை நாடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ராமர் கோவிலுக்காக தனக்கு நன்கொடை ரசீது புத்தகம் வழங்கப்பட்டது. அதன் மூலம் ரூ.80 ஆயிரம் வசூலித்து கொடுத்துவிட்டதாக பிரதாப்சிங் கூறுகிறார்.
ஆனால் பிரதாப்சிங்கின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பள்ளி நிர்வாகிகள், அவர் தானே விரும்பித்தான் 3 நன்கொடை ரசீது புத்தகங்களை பெற்றதாகவும், ஆனால் வசூலித்த தொகையை வழங்கவில்லை என்றும், அவர் தானாகவே ராஜினாமா செய்துவிட்டார் எனவும் தெரிவித்தனர்.