டெல்லியில் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்கள் பக்க விளைவு இல்லை என உற்சாகம்
டெல்லியில் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்கள் பக்க விளைவு இல்லை என உற்சாகம்
புதுடெல்லி,
நாடு முழுவதும் 2-ம் கட்ட தடுப்பூசி பணிகள் நேற்று தொடங்கிய நிலையில், தலைநகர் டெல்லியில் 136 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட 196 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அங்கு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு நேற்று நண்பகல் 12 மணியில் இருந்து தடுப்பூசி போடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல மையங்களில் காலையில் இருந்தே முதியவர்கள் வரத்தொடங்கினர். அங்கு நீண்ட நேரமாக அவர்கள் வரிசையில் காத்திருந்ததால், 12 மணிக்கு முன்னதாகவே தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இதனால் முதியவர்கள் மகிழ்ச்சியுடன் தடுப்பூசி போட்டு சென்றனர். டெல்லி ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மூத்த குடிமக்கள் 15 பேர் அடங்கிய குழு ஒன்றுக்கு எங்கள் ஆஸ்பத்திரியில் காலையிலேயே தடுப்பூசி போடப்பட்டது. அதில் பலரும் ஊன்றுகோல் உதவியுடன்தான் நடந்து வந்தனர். தடுப்பூசி போடுவதில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தை பார்க்கும்போது எங்களுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது’ என்று தெரிவித்தார்.
அங்கு முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தர்பால் (வயது 68) என்ற முதியவர் கூறும்போது, ‘எனது பெயரை மகன்தான் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தான். காலையிலேயே இங்கு வந்து காத்திருந்தேன். சுமார் 11.15 மணியளவில் எனக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போதுவரை எந்த பக்க விளைவுகளும் எனக்கு இல்லை’ என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.