கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கிறார்கள்

வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட கர்நாடகம் வந்த மத்திய குழுவினர் எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் பாதிப்பு இடங்களை இன்று ஆய்வு செய்கிறார்கள்.

Update: 2020-12-13 22:51 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக வட கர்நாடகம் மற்றும் கடலோர கர்நாடகம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. கர்நாடக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது. மேலும் கர்நாடக அரசு, மத்திய குழுவை அனுப்பி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து நிதி உதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

அதனை ஏற்று மத்திய அரசு ஒரு குழுவை கர்நாடகத்திற்கு அனுப்பியுள்ளது. அந்த குழுவினர் நேற்று கர்நாடகம் வந்தனர். அந்த குழுவினர் பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த குழுவினருக்கு, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வீடியோ மூலம் எடியூரப்பா எடுத்துக் கூறினார். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டு, விரைவாக மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கி நிதி உதவி கிடைக்க உதவுமாறு முதல்-மந்திரி கேட்டுக் கொண்டார்.

அந்த மத்திய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) 3 குழுக்களாக பிரிந்து கலபுரகி, விஜயாப்புரா, உடுப்பி ஆகிய 3 மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். இன்று இரவு அந்த மாவட்டங்களில் தங்கும் அந்த குழுவினர், நாளை (செவ்வாய்கிழமை) பெங்களூரு வருகிறார்கள். இங்கு தலைமை செயலாளரை நேரில் சந்தித்து பேசிவிட்டு, விமானம் மூலம் அவர்கள் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள். மத்திய குழுவினர் ஆய்வு செய்ய தேவையான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செய்துள்ளன.

மேலும் செய்திகள்