விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கைது

விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று லக்னோவில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-12-07 10:54 GMT
லக்னோ

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு உள்ளனர். புராரி மைதானம் மற்றும் திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 26-ந் தேதி முதல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டங்களால் டெல்லி முடங்கி வருகிறது.

அரியானா, உத்தரபிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகளை விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால், இந்த சாலைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தலைநகர் போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. இதனால் மாற்று சாலைகளை பயன்படுத்த போக்குவரத்து போலீசார் டெல்லிவாசிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று 12-வது நாளாக தொடர்ந்தது. சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குழுமி உள்ளனர்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்ள லக்னோவில் இருந்து புறப்பட்டார்.  போலீசார் அவரையும் அவரது ஆதரவாளர்களையும் தடுத்து நிறுத்தினர் இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர்.  இதில் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் சிலர் காயம் அடைந்தனர்.

நீண்ட நீர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அகிலேஷ் யாதவை கைது செய்தனர், நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்