புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை

கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

Update: 2020-12-02 16:28 GMT
திருவனந்தபுரம்,

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இதற்கு புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு இலங்கையை கடந்து நாளை காலை மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில், புரெவி புயல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று தெரிவித்தார். கேரளாவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 175 குடும்பங்களைச் சேர்ந்த 697 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து கேரளாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது கேரளாவில் 8 பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார். 

விமானப் படை மற்றும் கடற்படை உள்ளிட்டவை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் பிரதமரிடம் கூறினார். மேலும் பல்வேறு விவரங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். மேலும் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தான் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்