ஐ.என்.எஸ் கோரா கப்பலில் இருந்து எதிர்ப்பு ஏவுகணை ஏவி சோதனை வெற்றி

வங்கக்கடல் பகுதியில் இந்திய கடற்படை தற்போது போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

Update: 2020-10-30 20:55 GMT
புதுடெல்லி, 

லடாக்கில் சீனாவுடனான பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து, இந்திய கடற்படை இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் தனது படை பலத்தை கணிசமாக உயர்த்தியது.

மேலும் இந்தியாவை சுற்றியுள்ள கடல் பாதைகளில் தனது போர் தயார் நிலையை பிரதிபலிக்கும் வகையில் இந்திய கடற்படை தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதங்களில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன் இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக வங்கக்கடல் பகுதியில் இந்திய கடற்படை தற்போது போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த போர் பயிற்சியின் ஒரு பகுதியாக கப்பலைத் தாக்கி அழிக்கும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை இந்திய கடற்படை நேற்று வெற்றிகரமாக சோதித்தது. இதுகுறித்து இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் “இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணையை தாங்கி செல்லும் ஐ.என்.எஸ் கோரா கப்பலில் இருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை ஏவி சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை வங்கக்கடலில் நீண்ட தூரத்தில் இருந்த இலக்கை, துல்லியமாக தாக்கியது. இலக்கானது சேதமடைந்ததுடன், தீப்பிடித்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 23-ந்தேதி, அரபிக்கடல் பகுதியில் ஐ.என்.எஸ். பிரபால் கப்பலில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள கப்பலை தாக்கி அழிக்கும் வகையில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்