மார்ச் 22-ந்தேதிக்குப்பின் முதல் முறையாக இந்தியாவில் கொரோனா பலி சதவீதம் 1.52 ஆக சரிந்தது
நாடு முழுவதும் மேலும் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் கொரோனா பலி சதவீதம் கடந்த மார்ச் 22-ந்தேதிக்குப்பின் முதல் முறையாக 1.52 ஆக சரிந்திருக்கிறது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் மேலும் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் கொரோனா பலி சதவீதம் கடந்த மார்ச் 22-ந்தேதிக்குப்பின் முதல் முறையாக 1.52 ஆக சரிந்திருக்கிறது.
உலக மனித குலத்தை பீடித்திருக்கும் கொரோனா தொற்று 10 மாதங்கள் ஆகியும் விலக மறுக்கிறது. வல்லரசான அமெரிக்கா முதல் ஏழை நாடுகள் வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் முடங்கி கிடக்கின்றன. தொற்றுக்கு எதிரான மருந்து இன்னும் வசப்படாததால் இந்த முடக்கம் தொடரவே செய்கிறது.
பிற நாடுகளைப்போலவே இந்தியாவும் இந்த கொடூர வைரசின் பிடியில் சிக்கி இருக்கிறது. இங்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புதிய பாதிப்புகளும், நூற்றுக்கணக்கான மரணங்களும் கொரோனாவின் கொடூர பார்வையால் கிடைத்து வருகிறது. இதில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டும் குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைக்கவில்லை.
அந்த வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 63 ஆயிரத்து 371 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 லட்சத்து 70 ஆயிரத்து 468 ஆக உயர்ந்திருக்கிறது. நாட்டின் புதிய பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்தாலும், தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை.
இதைப்போல நாள்தோறும் நிகழும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களைவிட மேற்படி 24 மணி நேரத்தில் சற்று அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக நாடு முழுவதும் 895 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். எனினும் கடந்த 4-ந்தேதி முதல் இந்தியாவின் சாவு எண்ணிக்கை 1000-க்கு கீழேதான் நீடித்து வருவது கவனிக்கத்தக்கது.
இந்த 895 மரணங்களையும் சேர்த்து நாடு முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு இன்னுயிர் ஈந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 161 ஆக அதிகரித்து உள்ளது. மொத்த மரணங்களில் மராட்டியத்தில் மட்டுமே 41 ஆயிரத்து 196 பேர் பலியாகி இருக்கின்றனர். இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் நிகழ்ந்த மரணங்களிலும், மராட்டியர்கள் 337 பேர் அடங்கி உள்ளனர்.
அதேநேரம் உலக அளவில் மிகவும் குறைந்த கொரோனா பலி விகிதத்தை பெற்றிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. ஏனெனில் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 81 என்ற விகிதத்திலேயே மரணம் நிகழ்ந்திருப்பதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது.
எனினும் புதுச்சேரி (403), மராட்டியம் (335), கோவா (331), டெல்லி (317), கர்நாடகா (152), தமிழ்நாடு (135), பஞ்சாப் (131) உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசிய சராசரியை விட அதிகம் வைத்திருக்கின்றன. அதேநேரம் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசிய சராசரியை விட குறைவாகவும் வைத்துள்ளன.
மேலும் நாட்டின் கொரோனா பலி விகிதம் 1.52 என்ற நிலையிலேயே நீடிக்கிறது. இவ்வாறு பலி விகிதம் குறைந்திருப்பது கடந்த மார்ச் 22-ந்தேதிக்குப்பின் இதுவே முதல் முறையாகும்.
கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய-மாநில அரசுகளின் இணைந்த முயற்சிகள், நாடு முழுவதும் சுகாதார வசதிகளை பெருக்கிக்கொண்டதே இந்த சாவு விகித குறைப்புக்கு காரணம் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. நாடு முழுவதும் 2,212 ஆஸ்பத்திரிகள் கொரோனா சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றன.
இதைப்போல கொரோனா நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து மத்திய அரசும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் மூலம் மாநில டாக்டர்களுடன் நடத்தப்படும் இ-ஐ.சி.யு. முறையும் கொரோனா சிகிச்சையின் தரத்தை உயர்த்த உதவுகின்றன.
இந்த நடவடிக்கைகளால் கொரோனாவில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து, சாவு விகிதம் குறைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்து 338 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 64 லட்சத்து 53 ஆயிரத்து 779 ஆக அதிகரித்து இருக்கிறது. இது மொத்த பாதிப்பில் 87.56 சதவீதம் ஆகும்.
புதிதாக பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையை விட, தினசரி குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலையில் 8 லட்சத்து 4 ஆயிரத்து 528 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இது முந்தைய நாளை விட 7 ஆயிரத்து 862 பேர் குறைவாகும். சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 8 நாட்களாக 9 லட்சத்துக்கு கீழே நீடிப்பது குறிப்பிடத்தக்கது. இது வெறும் 10.92 சதவீதம் ஆகும்.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் 10 லட்சத்து 28 ஆயிரத்து 622 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்தியா இதுவரை மேற்கொண்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 9 கோடியே 22 லட்சத்து 54 ஆயிரத்து 927 ஆக அதிகரித்து இருக்கிறது.