வட்டிக்கு வட்டி தள்ளுபடி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ரூ.2 கோடி வரையிலான வங்கி கடனுக்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-15 01:52 GMT
புதுடெல்லி,

வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களுக்கான மாதத்தவணையை கொரோனாவால் 6 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாக கூறி, அதை ரத்து செய்யக்கோரி கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கிடையே 2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளவர்களுக்கு மட்டும் மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலான 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

மேலும் கடன் தவணை உரிமை காலத்தை 6 மாதங்களுக்கு மேல் நீட்டித்தால் கடனை திருப்பி செலுத்தும் போக்கில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் வங்கி கடன்களை உரிய நேரத்தில் செலுத்துவது சீர்குலையும் என இந்திய ரிசர்வ் வங்கி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ரூ.2 கோடி வரை வங்கி கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்று முடிவு செய்தாகிவிட்டது. இந்த முடிவை எப்போது அமல்படுத்தப்போகிறீர்கள்? என கேட்டனர்.

அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வங்கிகள் கூட்டமைப்பின் சார்பில் ஆஜரான வக்கீல் ஹரீஷ் சால்வே ஆகியோர், ‘ரூ.2 கோடி வரை வங்கி கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வட்டிக்கு வட்டி இல்லை என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு மாதம் அவகாசம் வேண்டும்’ என்றனர்.

இதற்கு நீதிபதிகள், ‘ரூ.2 கோடி வரை வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்ற முடிவு எடுத்த பிறகு, அதை நடைமுறைப்படுத்த தாமதம் செய்ய வேண்டியதில்லை. இவ்வாறு தாமதம் செய்வது பொதுமக்கள் நலனுக்கு உகந்ததாக இல்லை. வட்டிக்கு வட்டி இல்லை என்ற திட்டம் செயல்படுத்தப்படுமா? என சாதாரண மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

சாதாரண மக்களின் நிலையை பாருங்கள். எனவே ரூ.2 கோடி வரை வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்ற திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக முடிவு எடுத்து நவம்பர் 2-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும், சாதாரண மக்கள் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடுவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது’ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்