தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி மத்திய அரசு அறிவிப்பு

பீகார் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு நிபந்தனையுடன் மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

Update: 2020-10-08 23:30 GMT
புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் பெருமளவில் கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை விலக்கி மத்திய அரசு தளர்வுகளை தற்போது அறிவித்து வருகிறது.

அந்தவகையில் கடந்த 30-ந்தேதி அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி வருகிற 15-ந்தேதி முதல் சமூக, அரசியல், மத நிகழ்ச்சிகளில் 100-க்கு மேற்பட்டோர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் உள்ளரங்குகளில் பாதியளவுக்கே மக்கள் அமரவும், அதிகபட்சம் 200 பேர் வரையும் அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் பீகாரில் வருகிற 28-ந்தேதி முதல் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதைப்போல பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 56 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளவும், பிரசார கூட்டங்களை நடத்தவும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

எனவே இதற்கு மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து இருக்கிறது. இது தொடர்பாக கடந்த 30-ந் தேதி வெளியிட்ட அறிவிப்பில் திருத்தி உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வருகிற 15-ந்தேதி முதல் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே தற்போதைய நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே அக்டோபர் 15-ந்தேதிக்கு முன்னேயும் பிரசார கூட்டங்களை நடத்திக்கொள்வதற்கு வசதியாக பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் பிரிவு 10(2)(1)-ன்கீழ் அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன்படி அரசியல் கூட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 100 பேருக்கு மேலாகவும் நிபந்தனையுடன் ஆட்சிகளை அனுமதிக்கலாம்.

மூடிய அரங்குகளில் பாதியளவுக்கே, அதிகபட்சம் 200 என்ற அளவிலேயே நபர்களை அனுமதிக்க வேண்டும். திறந்த வெளி என்றால், மைதானத்தின் அளவை பொறுத்து நபர்களை அனுமதிக்கலாம்.

கூட்டங்களில் பங்கேற்கும் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை, சானிடைசர் அனைத்தும் கட்டாயம் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக மாநிலங்கள் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை வகுத்துக்கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்