திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நாட்களில் 4 மாட வீதிகளில் தங்கத்தேர், மரத்தேரோட்ட உலா ரத்து - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நாட்களில் 4 மாட வீதிகளில் தங்கத்தேர், மரத்தேரோட்ட உலா ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Update: 2020-09-11 12:46 GMT
திருமலை, 

இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 27-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி 15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 18-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் ஆகியவை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

அதேபோல் 24-ந்தேதி தங்கத்தேரோட்டம், 26-ந்தேதி மரத்தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாகக் கோவில் உள்ளே சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை வைத்து, கோவில் தங்கப் பிரகாரத்தை வலம் வருகின்றனர். 

27-ந்தேதி சக்கர ஸ்நானம் ஸ்ரீவாரி புஷ்கரணியில் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி வாகனச் சேவை, ஸ்நாபன திருமஞ்சனம் ஆகியவை கோவில் உள்ளே கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்