நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால், நோய்த்தொற்று குறையும் வரை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வையும், உயர்கல்வி நிறுவனங்களில் என்ஜினீயரிங் படிப்புக்கு நடத்தப்படும் ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத் தேர்வையும் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 17-ந்தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் 6 மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை கடந்த 4-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜே.இ.இ. தேர்வு கடந்த 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடந்து முடிந்தது.
திட்டமிட்டபடி வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை மும்முரமாக செய்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று குறையாததால் நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி கேசவ் மகேஸ்வரி என்பவர் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், நீட் தேர்வை பாதுகாப்புடன் நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அத்துடன், இந்த பிரச்சினையில் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
எனவே, வருகிற 13-ந்தேதி திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது.