இந்திய ராணுவம் சுட்டதாக சீனா அபாண்டம்: எல்லையில் மீண்டும் உச்சகட்ட பதற்றம்
இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்து தங்கள் துருப்புகளை சுட்டதாக சீனா அபாண்ட பழி போட்டுள்ளது. இந்தியா அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப்பிரச்சினை நீடித்து வருகிறது. இதன் இடையே கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன துருப்புகளை இந்திய படைவீரர்கள் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். சீன தரப்பில் 30 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், கடந்த 29-ந் தேதி கிழக்கு லடாக் பகுதியில் பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன துருப்புகள் அத்துமீற முயன்றபோது, இந்திய வீரர்கள் அதை முறியடித்தனர். அதைத் தொடர்ந்து இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படாமல் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு, அசல் கட்டுப்பாட்டு கோட்டைக்கடந்து வந்து, இந்திய படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் என்று சீனா அபாண்டமாக பழிபோட்டுள்ளது.
இதையொட்டி, சீன ராணுவ செய்தி தொடர்பாளர் கூறும்போது, “இந்திய படை வீரர்கள், அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியை சட்டவிரோதமாக தாண்டி வந்து, பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரையிலும், ஷென்பாவ் மலைப்பகுதியிலும் நுழைந்தனர். அவர்கள் அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சீன எல்லை பாதுகாப்பு படையினரை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். சீன எல்லை பாதுகாப்பு படையினர் கள நிலைமையை உறுதிப்படுத்த, எதிர்நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது மிகவும் மோசமான இயல்புடைய தீவிரமான ஆத்திரமூட்டும் நடவடிக்கை ஆகும்” என குறிப்பிட்டார்.
இதற்கிடையே சீனாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்து உள்ளது.
இதையொட்டி இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், படைகளை விலக்கிக்கொள்ளவும், பதற்றத்தை தணிக்கவும் இந்தியா உறுதியுடன் இருந்து வருகிறது. ஆனால் சீனா தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீன துருப்புகள்தான் ஒப்பந்தங்களை மீறி, ஆக்கிரமிப்பு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், ராணுவ, ராஜதந்திர, அரசியல் மட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன.
கடந்த திங்கட்கிழமையன்று சீன துருப்புகள்தான், அசல்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் முன்னோக்கிய நிலைகளில் ஒன்றை நோக்கி நெருங்கி வர முயற்சித்தன. இந்திய படை வீரர்களை அச்சுறுத்தும் வகையில் சீன துருப்புகள் வானத்தை நோக்கி சில ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இவ்வாறாக சீன துருப்புகள் கடுமையான ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதும், நமது படை வீரர்கள் மிகுந்த கட்டுப்பாட்டை கொண்டிருந்தனர். முதிர்ச்சியுடனும், பொறுப்பான முறையிலும் நடந்து கொண்டனர்.
இந்திய படைகள், எல்லையில் அமைதி மற்றும் சமாதானத்தை பேணுவதில் உறுதி கொண்டுள்ளன. இருப்பினும் தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் என்ன விலை கொடுத்தேனும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கின்றன.
சீன ராணுவத்தின் குற்றச்சாட்டு, தங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சி ஆகும்.
இவ்வாறு அதில் இந்திய ராணுவம் கூறி உள்ளது. இதன் காரணமாக எல்லைப்பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில் சீனா தன் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்துள்ளது. எல்லையில் படைகளை முடிந்தவரையில் விரைவாக திரும்ப பெற விருப்பம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், பீஜிங்கில் நிருபர்களிடம் நேற்று பேசும்போது, “நமது துருப்புகள், முகாம் பகுதிக்கு திரும்பி வருவார்கள் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். எல்லைப்பகுதிகளில் இனி மோதல் இருக்காது. அந்த இடம் மிகவும் மோசமான இயற்கை சூழலை கொண்டுள்ளது என்பதை அறிவோம். அது 4 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு மேலே உள்ளது. இது குளிர்காலமாக இருந்தால், மனிதர்கள் வாழ்வதற்கு அது நல்லதல்ல. எனவே ராஜதந்திரம் மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சு வார்த்தைகள் மூலமும், ஆலோசனைகள் மூலமும் நாம் கூடிய விரையில் படைகளை திரும்ப பெற முடியும், ஒருமித்த கருத்தை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என குறிப்பிட்டார்.
நடந்தது என்ன?
எல்லை பகுதியில் நடைபெற்ற மோதல் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அவை வருமாறு:-
அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில், சீன துருப்புகள் 50, 60 பேர் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பங்கோங் சோ ஏரிப்பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் நிலை நோக்கி அணிவகுத்தனர். அவர்கள் கைகளில் இரும்பு ராடுகள், ஈட்டிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக வந்தனர்.
இதே போன்றுதான் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதியன்றும், இந்திய படைவீரர்கள் எதிர்பார்த்திராத வேளையில் இரும்பு ராடுகள், ஆணிகள் பதித்த குச்சிகள், கூர்மையான ஆயுதங்களுடன் வந்து இந்திய படை வீரர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கொன்றனர்.
ஆனால் இந்த முறை அவர்களின் கனவு பலிக்கவில்லை. இந்திய படை வீரர்கள் சுதாரித்துக்கொண்டு, தீரமுடன் மோதினர், அவர்களை திரும்பும்படி இந்திய படை வீரர்கள் கட்டாயப்படுத்தினர். அப்போது அவர்களை பயமுறுத்தும் வகையில் வானத்தை நோக்கி சீன துருப்புகள் 10-15 ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். லடாக் எல்லையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ள துப்பாக்கி சூடு இதுதான். இதுதான் அங்கு நடந்தது என நேரில் கண்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 3, 4 நாட்களாகவே லடாக்கில் உயரமான இடங்களில் இருந்து இந்திய படை வீரர்களை அகற்றி விட்டு, ஆக்கிரமிக்க சீன துருப்புகள் முயற்சித்து வந்தாலும், பங்கோங் சோ ஏரி பகுதியின் தெற்கு கரையைச் சுற்றியுள்ள சிகரங்களில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீன ஊடகங்களுக்கு இந்தியா கண்டிப்பு
லடாக்கில் நேற்று முன்தினம் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை தாண்டி வந்து இந்திய படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக அபாண்டமாக சீனா பழிபோட்டுள்ளது.
இதையொட்டி சீன ஊடகங்களான சீனா டெய்லி, குளோபல் டைம்ஸ் ஆகியவை யூகத்தின் அடிப்படையில் தவறான தகவல்களுடன் செய்தி வெளியிட்டுள்ளன.
அதை இந்தியா கண்டித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “சீனா டெய்லி, குளோபல் டைம்ஸ் உள்ளிட்ட சீன அரசு ஊடகங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சில கருத்துகளை கூறி இருப்பதை கண்டோம். இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. அவை உண்மைகளை அடிப்படையாக கொண்டவை அல்ல. இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுவதில் இருந்து விலகி இருக்குமாறு சீன ஊடகங்களை கூறுகிறோம்” என கூறப்பட்டுள்ளது.