இந்தியா வரும் வழியில் இலங்கை கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் தீ பிடித்தது; ஒருவர் மாயம்

கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதால் இலங்கை கடற்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் ஒருவர் காயமடைந்ததுடன், மற்றொருவர் மாயமாகி உள்ளார்.

Update: 2020-09-03 23:26 GMT
புதுடெல்லி,

பனாமா நாட்டுக்கு சொந்தமான ‘நியூ டைமண்ட்’ கப்பல், குவைத்தில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. இந்த கப்பலில் மாலுமி, பொறியாளர்கள் என 23 ஊழியர்கள் இருந்தனர். இந்த கப்பல் இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்தபோது அதன் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் அது கப்பலின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் கப்பலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், ஊழியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இலங்கையின் கிழக்கு கரையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்த கப்பலில் இருந்து இலங்கை கடற்படைக்கு அவசர தகவல் கொடுக்கப்பட்டது. உடனே இலங்கை கடற்படையின் 4 கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இதைப்போல இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷியாவின் 2 போர் கப்பல்களும் விபத்து நடந்த இடத்துக்கு சென்று தீயணைப்பு பணிகளை மேற்கொண்டன.

இதற்கிடையே கப்பலில் இருந்த ஊழியர்கள் 19 பேர் உயிர்காக்கும் படகுகள் மூலம் கப்பலில் இருந்து வெளியேறினர். அவர்களை இலங்கை கடற்படை கப்பல்கள் மீட்டன. மேலும் கப்பலில் இருந்த கேப்டன் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்து உள்ளது.

எனினும் கப்பலில் இருந்த மற்றொரு ஊழியர் மாயமாகி உள்ளார். அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இதைப்போல மீட்கப்பட்ட ஊழியர்களில் என்ஜினீயர் ஒருவர் காயமடைந்திருந்தார். அவர் கடற்படை படகு மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கப்பலில் பிடித்த தீயை அணைக்க இந்தியாவின் உதவியை இலங்கை நாடியது. எனவே இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சவுரியா, சரங் மற்றும் சமுத்ரா ஆகிய 3 கப்பல்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் டோர்னியர் விமானம் ஒன்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக இலங்கைக்கு விரைந்தது.

தீ விபத்து ஏற்பட்ட கப்பல் தற்போது இலங்கையின் கிழக்கு கரையில் இருந்து 180 மைலுக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கப்பலில் பிடித்த தீயை அணைக்கும் பணிகள் வேகமாக நடந்தன. இந்த சம்பவத்தால் இலங்கை கடற்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்