ராஜஸ்தான் காங்கிரஸ் அரசை கவிழ்க்க மத்திய அமைச்சர் பேரம்? பரபரப்பு ஆடியோ வெளியிட்ட காங்கிரஸ்

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Update: 2020-07-17 08:48 GMT
ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகரிடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மாவிடம் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், பாஜக தலைவர் சஞ்சய் ஜெயின் ஆகியோர் பேரம் பேசியதாக ஆடியோ நேற்று வெளியானது. 

இதுதொடர்பாக, ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பன்வர் லால் சர்மா, விஸ்வேந்தர சிங் ஆகியோரை காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருப்பதாக தெரிவித்தார்.

மாநில அரசை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மீது வழக்கு பதிவு செய்து உடனே கைதுசெய்ய வேண்டும், அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் வழங்க கருப்பு பணம் எங்கிருந்து வந்தது என விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்