ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-14 08:45 GMT
ஜெய்பூர்,

ராஜஸ்தான் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள்  பிளவு ஏற்பட்டுள்ளது.  அம்மாநில  முதல் மந்திரி அசோக் கெலாட் மற்றும் துணை முதல் மந்திரி சச்சின் பைலட் இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. இதையடுத்து, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டார்.

இந்த பரபரப்பான சூழலில் கட்சியின் சட்டசபைக்குழு கூட்டம் நேற்று முதல்-மந்திரி அசோக் கெலாட் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனினும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பஸ்கள் மூலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச்சென்று தங்க வைக்கப்பட்டனர். ஆட்சிக்கவிழ்ப்புக்காக குதிரை பேரம் நடப்பதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில்,  ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் போர்மான்ட் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 102 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் சச்சின் பைலட்டை துணை முதல் மந்திரி பதவியில் நீக்க இருந்த முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல்,  ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. சச்சின் பைலட்டுக்கு பதிலாக கோவிந்த் சிங் டோட்சரா புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்