தங்கம் கடத்தல் : மத்திய அமைப்புகள் விசாரணை நடத்த கேட்டு கேரள முதல்வர் பிரதமருக்கு கடிதம்
தங்கம் கடத்தல் தொடர்பாக மத்திய அமைப்புகள் விசாரணை நடத்த கேட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
திருவனந்தபுரம்
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர்.
அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும். உடனே சுங்க இலாகா அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மணப்பாடில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்த சரித் குமார் என்பவருக்கு தங்க கடத்தலில் தொடர்பு இருப்பதும், மேலும் அங்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு சரித் குமார் பணிநீக்கம் செய்யப்பட்டதும் தெரிய வந்தது. அதன்பிறகு, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதை மறைத்து, தான் தொடர்ந்து பணிபுரிவதாக தெரிவித்ததாகவும், அதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து அடிக்கடி தூதரகத்துக்கு பார்சல்கள் வந்தன. அந்த பார்சல்கள் சோதனை செய்யப்படாததை, சரித் குமார், தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தங்கத்தை பல முறை கடத்தியதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சரித் குமாரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த கடத்தலுக்கு தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் என்பவர் மூளையாக செயல்பட்டதும், இவர்கள் இருவரும் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி பல கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கலாம் எனவும் அதிகாரிகள் கருதுகிறார்கள்.
ஸ்வப்னா சுரேஷ் தற்போது தலைமறைவாகி விட்டார்.தங்க கடத்தல் குறித்து பிரதமர் மோடிக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். அதில் மத்திய அமைப்புகள் விசாரணை நடத்த கேட்டு கொண்டு உள்ளார். கடிதத்தில் இந்த குற்றத்தின் ஒவ்வொரு முடிச்சியும் அவிழ்க்கப்பட வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழக்கூடாது" என்று பினராயி விஜயன் எழுதி உள்ளார்.
இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து உள்ளார்.