அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி ருத்ராபிஷே சடங்குகளுடன் தொடங்கியது.
அயோத்தி,
அயோத்தியில், சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.
கட்டுமான பணியை கண்காணிக்க ஒரு அறக்கட்டளை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. அதன் தலைவராக மகந்த் நிருத்ய கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை கடந்த ஏப்ரல் மாதம் எளிமையாக நடைபெற்றது. உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். சிலைகள், தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில், நேற்று அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமி இடத்தில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கியது. முதலில், காலையில், ருத்ராபிஷேம் என்ற சிறப்பு பூஜை நடைபெற்றது.
ராமஜென்மபூமியில் உள்ள குபேர் திலா என்ற பழங்கால சிவன் கோவிலில் இந்த சடங்குகள் நடந்தன. அறக்கட்டளையை சேர்ந்த மகந்த் கமல் நயன்தாஸ் தலைமையிலான சாதுக்களும், துறவிகளும் பங்கேற்றனர்.
கருப்பு பசுவின் 11 லிட்டர் பால், சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்டது. எவ்வித இடையூறும் இல்லாமல் கட்டுமான பணி நடக்க வேண்டும் என்று துறவிகள் வேண்டிக்கொண்டனர்.
பின்னர், கோவில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதன் அடையாளமாக முதல் செங்கல் எடுத்து வைத்து கட்டுமான பணி தொடங்கியது.
இதுகுறித்து மகந்த் கமல் நயன்தாஸ் கூறுகையில், “எந்த ஆன்மிக காரியத்தை தொடங்குவதற்கு முன்பும், சிவனை வழிபடுவது ராமரின் வழக்கம். அதையே நாங்களும் பின்பற்றி உள்ளோம்“ என்றார்.
ராமஜென்ம பூமியில், 30 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் வழிபாட்டு நிகழ்ச்சி இதுவே ஆகும்.
இந்த விழா, பிரதமர் மோடி பங்கேற்க பிரமாண்டமாக நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, எளிமையாக நடத்தப்பட்டுள்ளது.