நிசர்கா புயலுக்கு 4 பேர் பலி: 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு

மராட்டியத்தில் நேற்று கரையை கடந்த நிசர்கா புயல் 4 பேர் உயிரை பறித்துள்ளது.

Update: 2020-06-04 10:21 GMT
மும்பை,

மராட்டியத்தை மிரட்டிய நிசர்கா புயல் ராய்காட் மாவட்டம் அலிபாக் அருகே நேற்று மதியம் 1 மணிக்கு கரையை கடக்க தொடங்கியது. மாலை 4 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. நிசர்கா புயல் காரணமாக மும்பை, தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

புயல் கரையை கடந்த மைய பகுதியான அலிபாக்கில் பலத்த சேதம் ஏற்பட்டது. அங்கு ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. அலிபாக் மட்டுமின்றி அந்த பகுதி அடங்கிய ராய்காட் மாவட்டம் அதிக சேதத்தை சந்தித்தது. தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இங்கும் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. தானே, பால்கர், ராய்காட், புனே ஆகிய 4 மாவட்டங்களில் மின்வினியோகம் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. சுமார் 25 லட்சம் மின்நுகர்வோர் பாதிக்கப்பட்ட நிலையல், அந்த மாவட்டங்கள் இருளில் மூழ்கின. இதையடுத்து இங்கு மின் வினியோகத்தை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் மாநிலத்தில் 8 கடலோர மாவட்டங்களில் 63 ஆயிரத்து 700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.  எனினும் புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்தனர்.  ராய்காட் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவரும், மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒருவரும் உயிரிழந்தனர். ரத்தினகிரி மாவட்டம்தில் ஒருவரும், புனேயில் ஒருவரும் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்