ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று
ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் காவல்துறை உயர்அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து 4வது கட்டமாக ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம், வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
என்றாலும் முககவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்கள் சரியாக பின்பற்றாததால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ராஷ்டிரபதி பவனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மேலும் அவருடன் சேர்ந்து பணியாற்றிய பல அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதிகாரியின் அலுவலகம் முகப்பு கட்டடித்தில் உள்ளதாகவும், அது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அலுவலகத்திற்கு சற்று தூரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் ஜனாதிபதி மாளிகையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரின் உறவினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ள 'பிரசிடென்ட் எஸ்டேட்' பகுதியில் வசித்து வரும் 125 குடும்பங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.