மணிப்பூரில் 27 நாட்களுக்கு பின் தலைதூக்கிய கொரோனா; 4 பேருக்கு பாதிப்பு உறுதி
மணிப்பூரில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 27 நாட்களுக்கு பின் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இம்பால்,
நாட்டில் மிக குறைந்த அளவாக, மணிப்பூரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் 2 பேரும் தொடர்ந்து கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மற்றொருவருக்கு கண்காணிப்பு தொடர்ந்தது.
இந்நிலையில், மணிப்பூர் முதல் மந்திரி என். பைரன் சிங் கடந்த ஏப்ரல் 19ந்தேதி சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், கொரோனா பாதிப்பில் இருந்து முழு அளவில் மணிப்பூர் விடுபட்டு உள்ளது என்ற தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சிகிச்சை பெற்ற 2 நோயாளிகளும் முழு அளவில் மீண்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. மணிப்பூரில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை. மக்கள் ஒத்துழைப்பு, மருத்துவ பணியாளர் மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளால் இது சாத்தியப்பட்டது என பதிவிட்டார். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மணிப்பூர் முழுவதும் மீண்ட நிலையை அடைந்திருந்தது.
இந்நிலையில், கடந்த 27 நாட்களுக்கு பின்னர் மணிப்பூரில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 3 பேர் பெண்கள். இந்த நபர்களில் இரண்டு பேர் மும்பை மற்றும் சென்னையில் இருந்து சென்றவர்கள் மற்றொருவர் கொல்கத்தாவில் இருந்து சென்றவர். அவர்கள் அனைவரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.