சென்னை-டெல்லி சிறப்பு ரெயில்: பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் - ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்

சென்னையில் இருந்து டெல்லிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ஆரோக்கிய சேது செயலியை பயணிகள் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Update: 2020-05-13 22:45 GMT
புதுடெல்லி,

ஊரடங்கால் ரெயில் போக்குவரத்து ரத்தான நிலையில், சென்னையில் இருந்து டெல்லிக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. மேலும் வருகிற 17-ந்தேதியும் மற்றொரு ரெயில் டெல்லி செல்லும்.

இந்த சிறப்பு ரெயில்களில் என்னென்ன பொருட்கள் கிடைக்கும், என்னென்ன பொருட்கள் கிடைக்காது என்றும், கூடுதல் அறிவுரைகளையும் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவுரைகள் வருமாறு:-

* ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பு வரை டிக்கெட்டை ரத்து செய்ய அனுமதிக்கப்படும். டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

* மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்கு ஏதுவாக, பயணிகள் ரெயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் (1½ மணிநேரம்) முன்பே ரெயில் நிலையத்துக்கு வந்துவிட வேண்டும்.

* தற்போது இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டவையாக இருக்கும். இதனால் ராஜ்தானி விரைவு ரெயிலின் கட்டணம் இதற்குப் பொருந்தும்.

* ரெயிலில் பயணிக்கும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். ரெயில் நிலையங்களிலும், ரெயிலிலும் கை கழுவ சானிடைசர் திரவம் வழங்கப்படும்.

* பயணிகள் செல்லும் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில், அங்கு பரிந்துரைக்கப்படும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

* குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் வழங்கப்படும் போர்வை மற்றும் பிற பொருட்கள் தரப்படமாட்டாது. அதனால் பயணிகள் அனைவரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வர வேண்டும். சாப்பிடத் தயாராக இருக்கும் பார்சல் உணவுகள் மற்றும் குடிநீர் வழங்கப்படும்.

* சிறப்பு ரெயில்களில் பயணிக்கும் அனைவரும் தங்கள் செல்போனில் ‘ஆரோக்கிய சேது’ செயலியைப் பதிவிறக்கம் செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பயணிகள் தங்கள் செல்போனில் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்யாமல் வரும் பட்சத்தில், ரெயில் நிலையத்தில் வைத்து அவர்களை செயலியை பதிவிறக்கம் செய்ய அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இவ்வாறு இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்