சொந்த ஊர்களுக்கு வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல அனுமதிக்கக்கூடாது - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்கக்கூடாது என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

Update: 2020-05-11 23:00 GMT
புதுடெல்லி, 

மராட்டியத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் தங்கள் சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு நடந்து சென்ற தொழிலாளர்கள் 16 பேர் ஓய்வு எடுப்பதற்காக தண்டவாளத்தில் படுத்து தூங்கிய போது, சரக்கு ரெயில் ஏறியதில் உடல் சிதறி பலி ஆனார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊரடங்கின் காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால் பல இடங்களில் இதேபோல் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கிறார்கள்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு ரெயில் மற்றும் பஸ்களில் அனுப்பி வைக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுமதி அளித்து உள்ளது. எனவே அதன்படி அவர்கள் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

வெளிமாநில தொழிலாளர்கள் சாலை வழியாகவோ அல்லது ரெயில் பாதை வழியாகவோ சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதாக வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன.

அவர்கள் அவ்வாறு செல்ல அனுமதிக்கக்கூடாது. அப்படி சென்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அவர்களை தடுத்து நிறுத்தி உரிய ஆலோசனை வழங்கி அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்து, சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் வரை அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு இடையூறு இன்றி விரைவாக அனுப்பி வைக்கும் பிரச்சினையில் மாநில அரசுகள் ரெயில்வே நிர்வாகத்துடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும்.

ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் ஒரு இடத்தில் இருந்த மற்றொரு இடத்துக்கு தங்கு தடையின்றி செல்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்.

அப்போதுதான் அவர்களால் உயிர்களை காப்பாற்ற முடியும். மருத்துவ, சுகாதார பணியாளர்கள், ஆம்புலன்சுகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு இடையூறுகள் இருந்தால் மருத்துவ பணிகள் கடுமையாக பாதிக்கப்படும்.

பல இடங்களில் தனியார் ஆஸ்பத்திரிகள், நர்சிங் ஹோம்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வந்து உள்ளன. மக்களுக்கு தடங்கல் இன்றி மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில்அவை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்